ண்ணுலகில் ஏராளமான சிறப்புவாய்ந்த தலங்கள் பல இருக்கின்றன. சின்னஞ்சிறு கிராமங்களிலும் சிறப்புவாய்ந்த தலங்கள் ஏராளம் ஏராளம். அப்படிப் பட்ட தலங்களில் ஒன்றுதான் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகிலுள்ள கீரப்பாளையம் என்னும் ஊரில் ஸ்வேத நதியின் (வெள்ளாறு)தென்கரையில் அமைந்துள்ள சோமநாதர் ஆலயம். இந்த ஆலயம் சுமார் 1,700 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.

Advertisment

இந்த ஆலயத்தில் மூலவராக சோமநாதர் அருள்பாலிக்க, தனிச் சந்நிதியில் வலப்புறமாக திரிபுரசுந்தரி அம்பாள் அருள்பா-க்கிறாள். அதேபோல் இடப்புறம் பூரணி அய்யனார் புஷ்களாவுடன் அருள்பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் பல சிறப்புகள் உண்டு. வடலூர் இராமலிங்க சுவாமிகள் இங்குள்ள சுவேத நதிக்கரையில் நீராடி, இந்த சோமநாதரை வழிபட்டு, சிதம்பரத்திற்கு நடராஜரைக் காணச் சென்றதாகவும், அதேபோல் புவனகிரி என்ற புண்ணிய பூமியில் அவதரித்த ஸ்ரீராகவேந்திரர் இதே சுவேத நதிக்கரையில் நீராடிவிட்டு இந்த சோமநாதரை வழிபட்டதாகவும் கூறுகிறார்கள்.

ss

Advertisment

இந்த ஆலயத்தில் மிகச் சிறப்புவாய்ந்த நிகழ்வு, சிவராத்திரியன்று இரவு லிங்கத் திருமேனியாக இருக்கும் சோமநாதருக்கு அபிஷேகங்கள் செய்யும்பொழுது பால் நீலநிறமாக மாறும். இது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அற்புத நிகழ்வாகக் கூறுகிறார்கள். இந்த நீல நிறமாக மாறும் பாலை சோமநாதரின் அருட்பிரசாதமாக பக்தர்கள் வாங்கிச் செல்கின்றனர். சகல நோய்களையும் தீர்க்கும் வல்லமை இந்த சோமநாதரின் நீலநிறப் பாலுக்கு உண்டென்று பக்தர்கள் நம்பிக்கையோடு கூறுகிறார்கள்.

மனக்கவலைகள் ஏதேனும் இருப்பின் இவரின் சந்நிதிமுன் பத்து நிமிடங்கள் அமர்ந்து கண்மூடி, "ஓம் நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதுக்குள் உச்சரித்தபடி தியானம் செய்தால் மனக் கவலைகள் அனைத்தும் பறந்தோடிப் போகும். அதன்பிறகு முழு மன நிம்மதி கிடைக்கும் என்கிறார் கள் பக்தர்கள். இந்த ஆலயத்தில் சோமநாதர்முன் பலரும் தியானம் செய்வதைக் காணலாம்.

சிதம்பரம் கிழக்கு ஆதிமூலநாதர் சந்நிதி, வடக்கு கீரப்பாளையம் சோமநாதர் சந்நிதி, மேற்கு வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி சந்நிதி, தெற்கு திருவெண்காடு சுவேதாரணயேசுவரர் சந்நிதி என இந்த நான்கு சந்நிதிகளும் நான்கு திசைகளிலும், ஒரே நேர்க்கோட்டில் கட்ட வடிவில் உள்ளது.

இத்திருத்தலத்தில் இருக்கும் வீரன் முகம் சிதைக்கப் பட்டு இருக்கும். அதற்கு என்ன காரணம்? முகலாயர் ஆட்சிக் காலத்தில் இந்த சோமநாதர் திருத்தலம் மட்டுமே இங்கிருந்தது. இந்த திருத்தலத்தில் பூஜை செய்துவந்த சிவ பக்தர் கனவில் வீரன் வந்து, "நான் சுவேத நதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு வாழை மரத்தின்மீது இருக்கி றேன். என்னை எடுத்து சோமநாதர் ஆலயத்தில் வைத்துவிடுங்கள்' என்று கூறினாராம். அது மிகப் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலம். இந்த தகவலை அந்த சிவபக்தர் ஊரில் இருந்தவர்களிடம் சொல்ல, ஊரே திரண்டுசென்று சுவேத நதிக்கரையில் வீரனின் வருகைக்காக காத்து தவம் கிடந்தனர்.

ss

அவர் கனவில் வந்து வீரன் கூறியதுபோலவே வாழை மரத்தின்மீது ஒரு சிலை தென்பட்டது. அதை பக்தர்கள் சுவேத நதியில் நீந்திச் சென்று மீட்டெடுத்துவந்து இந்த சோமநாதர் ஆலயத்தில், சோமநாதரின் நேரெதிரில் தனிச் சந்நிதியில் பிரதிஷ்டை செய்தனர். இந்த வீரனை காவல் தெய்வமாக மக்கள் வழிபடத் தொடங்கிவிட்டனர்.

Advertisment

எந்தக் குறையாக இருந்தாலும் மனமுருகி வேண்டினால் உடனே வரம் கொடுப்பார் வீரன் என்று பக்தர்கள் பக்தியுடன் கூறுகிறார்கள்.

இங்கு ஒரு அதிசயமான மரமுள்ளது. இது இந்த ஆலயத்தின் தல விருட்சமாகப் போற்றப் படுகிறது. அது மூன்று மரங்கள் இணைந்து ஒரு மரமாகக் காட்சியளிக்கிறது. புங்கை மரம், வேப்பமரம், அரசமரம் ஆகிய இந்த மூன்று மரங்களும் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தவையென்று கூறுகி றார்கள். இந்த மரத்தைப் பார்க்க மிகவும் வியப்பாக உள்ளது. பக்தர்கள் தல விருட்சமான இந்த மரத்தில் மாங்கல்யக் கயிறு கட்டி வழிபாடு செய்கின்றனர்.

சகலவிதமான தோஷங் களால் தடைப்பட்ட திருமணங்கள் இந்த மாங்கல்யக் கயிறு கட்டும் பிரார்த்தனைமூலம் உடனடி யாக தடைகள் விலகி திருமணம் நடப்பதாகவும், வாழ்வும் சிறப்பாக அமைவதாகவும் பக்தர்கள் மெய்சி-ர்த்துக் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் அம்பாள், சுவாமி இருவருக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்தால், அனைத்துவிதமான பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வைப்பதாகக் கூறுகிறார்கள். இதுவொரு சர்வ பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கும் காலபைரவர் சந்நிதி ஒன்றுள்ளது. இந்த காலபைரவர் மிக சிறப்புவாய்ந்தவர். காலபைரவர் சிலையின் கீழே காலபைரவி யும் உள்ளார். இவர் காலபைரவருக்கு பூஜை செய்வதுபோல அமைந்திருக்கும் சிறப்பம்சம் வேறெங்கும் கிடையாது. இந்த காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகிறது.

ss

பக்தர்கள் பல்வேறுவிதமான பிரார்த்தனைகளை இங்கு மேற்கொள்கின்றனர். அவை: சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியன்று நெய் மற்றும் இளநீர் கலந்து தீபமேற்றவேண்டும்.

முதுகுத் தண்டுவடப் பிரச்சினை உள்ளவர்கள் புடலங்காயை நடுவில் பிளந்து, அதில் நெய்யூற்றி சிவப்பு காடா துணியால் நெய்தீபம் ஏற்றவேண்டும்.

இதயக் கோளாறுள்ளவர்கள் பரங்கிக்காயை இரண்டாக்கி அதில் நெய்தீபம் ஏற்றவேண்டும்.

ரத்தப் புற்றுநோய் மற்றும் புற்றுநோய் உள்ளவர்கள் பீட்ரூட்டில் நெய்தீபம் ஏற்றவேண்டும்.

நீதிமன்ற வழக்குகள், விசாரணைகள் போன்ற பிரச் சினைகளுக்கு பூசணிக்காயில் நெய்தீபம் ஏற்றவேண்டும்.

இந்த தீபங்கள் ஏற்றுவதால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வியாதிகள் குணமாவதாக பக்தர்கள் கூறுகிறார்கள்.

அதேபோல். எதிரிகள் தொல்லையால் அவதிப்படுபவர் கள் மூங்கில் இலையில் பூமாலைபோல் கட்டி காலபைர வருக்கு அணிவித்தால் எதிரிகளை காலபைரவர் சம்ஹாரம் செய்துவிடுவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறுகிறார்கள்.

இந்த ஆலயத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப் பெருமான் சந்நிதி, விநாயகர் சந்நிதி, கன்னியம்மன் சந்நிதி களும் உண்டு.

இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு ஆவணி மாதம் ஐந்தாம் தேதி 21-8-2022 அன்று நூதன ஆலயமாக, அனைத்து சந்நிதிகளுக்கும் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம், கே. வெங்கு செட்டியார் செல்லப்பன் பிள்ளை, செல்வம் பிள்ளை தலைமையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

சிறப்புமிக்க இந்த ஆலயத்தைக் காண நீங்களும் ஒருமுறை கீரப்பாளையம் வரலாமே... ஆலய தொடர்புக்கு: செந்தில் (தர்மகத்தா), செல். 96886 02798.

கடலூர்- சிதம்பரம் சாலையில் உள்ளது கீரப்பாளையம். வெள்ளாற்றங்கரை அருகிலேயே கோவில் உள்ளது.

காலை 6.00 மணிமுதல் மதியம் 1.00 மணிவரையிலும்; மாலை 4.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.